Skip to main content

வகுப்புவாதம் என்னும் இருளை நோக்கி இந்தியா

எப்போதும் இந்தியாவில் மிகப் பெரும் பிரச்சினையாக இருப்பது சாதிய வாதம் மற்றும் மதவாதம் . அவை இரண்டும் இந்தியா என்னும் பன்முக தேசியத்தின் அஸ்திவாரத்தை அசைத்து பார்த்திருக்கிறது. அதற்கு உதாரணமாக இந்தியா பாகிஸ்தான் பிரிவினை, இந்தியாவின் ஆன்மாவை சிதைத்த பாப்ரி மஸ்ஜித் இடிப்பு, குஜராத் இனப்படுகொலை, மற்றும் பல சாதிய கொடுமைகள் இந்த நாடு முழுவதும் பேசு பொருளானது. இவை இரண்டும் இன்றைக்கு இந்தியாவில் அடுத்த கட்ட வடிவம் எடுத்துள்ளது கும்பல் படுகொலை என்னும் பெயரில் வகுப்புவாதம் புது வடிவம் எடுத்துள்ளது. . இதனால் நாம் பெருமைப்படும் வேற்றுமையில் ஒற்றுமை (unity in diversity) என்னும் பண்பாட்டிற்கும் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மதச்சார்பற்ற கொள்கைக்கும் ஆபத்து ஏற்படும் தடசூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் எதிரொலியாக இந்த ஐந்து ஆண்டுகள் இந்தியாவில் மதம் சார்ந்த படுகொலைகள் அதிகரித்துள்ளது அதிலும் குறிப்பாக மாட்டிறைச்சி உணவிற்காகவும் மற்றும் இந்து மத கோஷம் சொல்லக் கோரி நடந்த படுகொலைகள் நடப்பது வேதனைக்குரியது. இதனை கண்டித்து ஒடுக்க வேண்டிய அரசு அதை செய்யாமல் இருப்பது மட்டுமல்ல அதனுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்தகைய கோசங்களை நாடாளுமன்ற மைய அவையில் வைத்தனர். அதற்கு உதாரணமாக ஐதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் அசதுத்தீன் உவைசி பதவி ஏற்கும் போது ஆளும் பாஜக அரசின் உறுப்பினர்கள் அவரை சீண்டும் விதமாக சனாதன கோசங்களை முன் வைத்தனர். இதனால் அசதுத்தீன் உவைசி தன்னுடைய இஸ்லாமிய நம்பிக்கை உரிமையை காப்பாற்ற அல்லாஹூ அக்பர் என்று சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்க்கு இது தான் நிலையென்றால் சாமானியனின் நிலை? இது தான் இன்றைய இந்தியாவின் நிலையாக இருக்கிறது.

இத்தகைய படுகொலைகள் 2012 ல் இருந்து ஆரம்பித்தாலும்,மோடி ஆட்சி 2014 ல் வந்த பிறகு இதன் தொடர்ச்சி மிகவும் அதிகமாக ஆரம்பித்தது அதற்கு மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக அமைச்சர்கள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை விதைத்த வெறுப்பு பிரச்சாரம்,தன்னுடைய கட்சி தொண்டர்களிடம் இத்தகைய தாக்குதல்கள் நடத்த உத்வேகம் அளித்தது. இதற்கு பின் இருப்பது இந்துத்துவம் என்கிற சனாதன கருத்தியல் அதனுடன் ஒட்டிய இஸ்லாமிய வெறுப்பு . உத்தரப் பிரதேசத்தில் உள்ள தாத்ரியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என்பதற்காக கொல்லப்பட்ட முதியவர் அக்லக்கில் ஆரம்பித்து சனாதன கோசங்களை சொல்ல சொல்லி கொல்லப்பட்ட தப்ரேஸ் அன்சாரி வரை கொல்லப்பட்டதற்கு பின்னால் இருப்பது சனாதன கருத்தியல். அக்லக், உனாவில் தலித்கள் தாக்கப்பட்ட போது எழுந்த எழுச்சி அதன் பின்னர் நடந்த எந்த ஒரு நிகழ்விற்கு பெரிய அளவில் மக்கள் திரள் போராட்டம் நடை பெறவில்லை. மாறாக இது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. இதுவும் இத்தகைய கும்பல் படுகொலை நடப்பதற்கு மிகவும் இலகுவாகி விட்டது.

உலகம் முழுவதும் இஸ்லாமிய வெறுப்பு என்பது நிறுவனமயமாக்கப்பட்ட தொழிலாக இருக்கிறது. அதனை இங்கு இருக்கிற ஆர. எஸ. எஸ் போன்ற இந்துத்துவ அமைப்புகள் இந்தியாவில் இஸ்லாமிய வெறுப்பை கட்டமைக்க மிக தீவிரமாக வேலை செய்கிறார்கள். இஸ்லாமிய வெறுப்பிற்கு அவர்கள் பின்பற்றும் பார்ப்பனிய சித்தாந்தம் வலு சேர்க்கிறது,ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் கோல்வால்கர் தன்னுடைய சிந்தனை கொத்துகள் (Bunch of Thoughts) நூலில் எதிரிகள் பட்டியலில் இஸ்லாமியர்களையும் குறிப்பிட்டிருந்தார். அப்படி இருக்கையில் அவர் வழி வந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்பது ஒன்றும் யூகிக்க முடியாத கடினமான ஒன்று அல்ல. அதில் அவர்கள் வெற்றியும் அடைந்தார்கள் என்பதை நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் நமக்கு சொல்கிறது. இப்படியான ஒரு சூழ்நிலையில் இஸ்லாமியர்கள் குறித்து அம்பேத்கர் ஒரு கரிசனமான பார்வை வைத்தார்,அண்ணல் அம்பேத்கர் சொல்கிறார் “இந்துத்துவ அரசியல் தன் அடையாளங்களை அழித்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாக, இஸ்லாம் சம்பந்தப்பட்ட அனைத்தையும் பேணிப் பாதுகாக்கும் உணர்வை அது அவர்களுக்கு ஏற்படுத்துகிறது. இரண்டாவதாக அரசியல் ரீதியிலும் இந்துக்களே மேலாதிக்கம் செலுத்தும் ஒரு சூழ்நிலையில் இந்திய முஸ்லீம்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் தாங்கள் ஒடுக்கப்படுவோம் என்று இஸ்லாமியர்கள் அஞ்சுகிறார்கள். (தொகுதி 15,பக்கம் 338,339).

கடந்த எழு ஆண்டுகளில் மாட்டுக்கறிக்காக அல்லது சனாதன கோசங்களை சொல்ல சொல்லி இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 95. தரவு அடிப்படையிலான செய்தி நிறுவனமான இந்தியா ஸ்பெண்டின் ஒரு அறிக்கை, “கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளில் (2010 முதல் 2017 வரை) போவின் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட 51% வன்முறைகளுக்கு முஸ்லிம்கள் இலக்காக இருந்தனர் – மேலும் 60 சம்பவங்களில் கொல்லப்பட்ட 25 இந்தியர்களில் 84% பேர் இதில் அடங்குவர். இந்த தாக்குதல்களில் 97% நரேந்திர மோடியின் அரசாங்கம் 2014 மே மாதம் ஆட்சிக்கு வந்த பின்னர் பதிவாகியுள்ளது. இந்த 2017 ஆம் ஆண்டிற்கு பின்னரும் இப் படுகொலை தொடர்ந்து. ”இது குறித்து அதிகாரப்பூர்வமாக அரசாங்கத்திடம் எந்த ஒரு தரவுகள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறினார். தன் சொந்த நாட்டில் உள்ள ஒரு மத நம்பிக்கை கொண்ட மக்கள் தாக்கப்படும் போது தங்களிடம் எந்த தரவுகளும் இல்லை என்று நாடாளுமன்றத்திலே மத்திய அமைச்சர் சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் இப்படிப்பட்ட ஆட்சியாளர்களிடம் சிறுபான்மை மக்களின் உரிமை மற்றும் அடையாளங்கள் எவ்வாறு பாதுகாக்கப்படும்?

இத்தகைய கும்பல் படுகொலைகள் இந்தியாவின் மதிப்பை மற்ற நாடுகள் முன் சிதைத்துவிட்டது. இது குறித்து அமெரிக்காவின் மத சுதந்திர அமைப்பான uscirf தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்தது. புகழ் பெற்ற டைம்ஸ் பத்திரிகை தேர்தல் முடிவுக்கு முன்னர் தன்னுடைய பத்திரிக்கையின் முகப்பு அட்டையில் பிரிவினையின் தலைவன் (Divider In Chief) என்று பிரதமர் மோடியை பற்றி குறிப்பிட்டது. இப்படி பல்வேறு நாடுகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர் இத்தனைக்கும் பிறகு மோடி தன்னுடைய வெற்றி விழாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றார். அதன் பிறகு தான் தப்ரேஸ் அன்சாரி படுகொலை, நாடாளுமன்ற அவையில் பாஜக உறுப்பினர்கள் எழுப்பிய சனாதன கோசங்கள் முழங்கியது. அப்படி என்றால் பிரதமரின் பேச்சுக்குரிய மதிப்பு இது தானா?

தப்ரேஸ் அன்சாரி படுகொலையை பிரதமர் கண்டிப்பதாக கூறினார். பிரதமர் என்பவர் கண்டிக்கும் இடத்தில் இல்லை இத்தகைய சம்பவங்கள் இனி நடைபெறாத வண்ணம் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்து அம்மக்களுக்கு நீதி வழங்கும் இடத்தில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பேச்சுகள் பிரதமர் பதவியில் இருப்பவர்க்கு அழகல்லவே.

இத்தகைய பாசிச குணாம்சம் கொண்ட மக்கள் விரோத ஆட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்திருப்பது என்பது உள்ளபடியே மிகவும் ஆபத்தான இதுவரை இந்தியா கண்டிராத மிக மோசமான காலகட்டத்தில் இருக்கிறோம். குறிப்பாக தலித்களும், சிறுபான்மையினர்களும் இதுவரை கண்டிராத மோசமான சூழ்நிலையில் இருக்கின்றனர். இத்தகைய பாசிச குணாம்சம் கொண்ட ஆட்சி எப்படி மீண்டும் ஆட்சிக்கு வந்தது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்த சமூகத்தை தங்களுக்கு ஏற்றபடி மாற்றினார்கள் என்ற புரிதல் நமக்கு வேண்டும்,காரணம் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் இவர்கள் கடந்த தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட எந்த ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை மாறாக நான் மேலே குறிப்பிட்ட அத்தனை விடயங்களும் நடந்தேறியது அப்படி இருந்தும் இமாலய வெற்றி பெற முடிந்தது என்றால் எங்கே தவற விட்டோம் என்பதை எதிர்க்கட்சிகள், செயற்பாட்டாளர்கள் உணர்ந்து அதை திருத்தி கொள்ள வேண்டும். இது குறித்து சுப்பிரமணியன் சுவாமி ஒரு பேட்டியில் சொன்னார் ` ஒரு அரசாக இது தோற்றுப் போன அரசு தான், ஆனால் நாங்கள் ஏற்றுக் கொண்ட இந்துத்துவ கருத்தியலில் மூலமாக நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார். ஆம் அது தான் உண்மை. எதிர் கருத்தியலில் உள்ளவர்கள் தாங்கள் கொண்ட கொள்கையில் உறுதிப்பாடு இல்லாமல் இருந்தது ஒரு காரணம் என்றால் ஒற்றுமையின்மை மற்றுமொரு மிக முக்கிய காரணம்.

இதன் பின்னர் எதிர்கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் செய்ய வேண்டிய மிக முக்கியமான விடயம் தாங்கள் கொண்ட கருத்தியலில் அடிப்படையில் சமூக பிரச்சனைகளை மக்கள் மொழியில் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த அரசாங்கத்தின் மக்கள் விரோத திட்டங்களை ஒன்று சேர்ந்து அம்பலப்படுத்த வேண்டும். அதற்கு எதிர்கட்சிகள் தங்கள் வேற்றுமைகளை எல்லாம் தள்ளி விட்டு ஒன்றுபட வேண்டும். நபிகளாரின் பொன் மொழி என் நினைவுக்கு வருகிறது “அநீதியான ஆட்சியாளர்களுக்கு எதிராக சத்தியத்தை நிலைநாட்ட வேண்டும்.” இதே போன்று குரானில் ஒரு வசனம் கூறுகிறது “ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றிப் பிடித்து கொள்ளுங்கள்.” இந்த இரண்டு பொன் மொழிகளும் இன்றைய சூழலில் ஒன்றுக்கொன்று பிண்ணிப் பிணைந்தவையாக இருக்கிறது. இதற்கு தான் தந்தை பெரியார் தன் வாழ்நாள் முழுதும் மக்கள் மத்தியில் எந்த ஒரு பெயரிலும் பிரிவினை ஏற்பட்டு விட கூடாது என்பதற்காக போராட்டம் நடத்தினார். அதற்காக இஸ்லாமியர்களையும் உள்ளடக்கி திராவிடர் என்று குறிப்பிட்டார் அத்தகைய பெரியார் மண் என்று பெருமிதத்துடன் சொல்லும் தமிழகத்தில் கடந்த வாரம் மாட்டு சூப் குடித்தது குறித்து தன் முகநூலில் பதிவிட்டதற்காக ஒரு இஸ்லாமிய இளைஞன் தாக்கப்பட்டார். இந்துத்துவத்தின் ஆக்டோபஸ் கரங்கள் தமிழகத்திலும் நுழைய முயற்சிக்கிறது. இது மிகவும் அச்சம் தரக்கூடிய போக்காக இருக்கிறது. இதற்கு நம் எதிர்வினை மாட்டுக்கறி திருவிழா நடத்துவதோடு மட்டும் நின்று விடுகிறது, இது மட்டும் போதாது சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு நாம் போராட்டத்தை மிகப்பெரிய அளவில் நடத்தி இருக்க வேண்டும். அவ்வாறு தண்டிக்கப்படும் பட்சத்தில் இது போன்ற தவறுகள் செய்ய எவருக்கும் துணிவு ஏற்படாது. மறுபடியும் நினைவூட்ட வேண்டியது இத்தகையை பாசிச அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு ஜனநாயக சக்திகள் தங்களுக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை ஓரம் கட்டிவிட்டு ஓரணியில் திரள வேண்டும். இரண்டாவதாக இந்த அரசாங்கம் செய்யும் மக்கள் விரோதப் போக்கை வெளிப்படுத்தி அதை பொது கருத்தாக உருவாக்க வேண்டும்.இதற்கான போராட்டம் நீண்ட பயணம் கொண்டது. இதற்கு அரசியல் களத்தில் மாற்றம் ஏற்படுத்தும் அதே வேளையில் பண்பாட்டு தளத்தில் மாற்றம் ஏற்படுவது அவசியம். இந்திய ஒன்றியம் என்னும் பன்முக தேசியத்தை ஒற்றை தேசியமாக மாறாமல் தடுப்பது ஜனநாயக சக்திகளின் முன் உள்ள மாபெரும் சவால்…
12/9/2019

Comments