கடந்த சில வாரங்களாக ஊடகங்களை மறுபடியும் ஆக்கிரமித்திருக்கிறது,
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்.அந்த பல்கலைகழக நிர்வாகம் கொண்டு வந்த விடுதி கட்டண வரைவு அறிக்கை தான்,இந்த போராட்டத்திற்கு மிகப் பிரதான காரணம்.அந்த வரைவு அறிக்கையில் விடுதி கட்டணம் 300 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.இதையொட்டி மாணவர்கள் துணைவேந்தரை சந்திக்க முயன்றனர்,ஆனால் துணைவேந்தர் மாணவர்களை சந்திக்க முன்வரவில்லை.இதனை கண்டித்து மாணவர்கள் பல்கலைகழக வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.இதன் ஒரு பகுதியாக கல்வியை தனியார்மயமாக்குதல் மற்றும் விடுதி கட்டண உயர்விற்கு எதிராக மாணவர்கள் பாராளுமன்றத்தை நோக்கி சென்றனர்.அதை தடுப்பதற்கு டெல்லி காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பிதித்தது.தடையை மீறி மாணவர்கள் பேரணி நடத்தினார்கள்.இப்பேரணியில் மாணவர்கள் மீது டெல்லி காவல்துறை மிக மூர்க்கமாக தாக்கியது,இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து சமூக வலைதளமான ட்விட்டரில் #Emergencyinjnu என்ற ஹேஷ்டேக் நாடு முழுக்க பரவியது.ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டம் பற்றியும், அதன் பின்னால் கல்வி கட்டமைப்பு சிதைக்கப்படுவதை பற்றியும் நாம் விரிவாக பேச வேண்டி உள்ளது.
இதை பற்றி பார்ப்பதற்கு முன் ஜே.என்.யூ. பற்றிய சுருக்கமான வரலாற்றை பார்த்து விடலாம்.இதன் மூலம் அவர்களின் போராட்டத்தின் பிண்ணனியை நாம் அறிந்து கொள்ள முடியும்.ஜவஹரலால் நேரு பல்கலைக்கழகம் 22 ஏப்ரல் 1969ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.இந்த மத்திய பல்கலைக்கழகம் உருவாகுவதற்கு அன்றைய கல்வி துறை அமைச்சர் எம.சி.சக்லா நாடாளுமன்றத்தில் சட்ட வரைவை கொண்டு வந்தார்.அந்த வரைவின் மீது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பூஷன் குப்தா,இந்த பல்கலைக்கழகம் நாட்டிலுள்ள மற்ற பல்கலைகழகங்கள் போலல்லாமல் உயர்ந்த சிந்தனையுடனும்,விளிம்பு நிலை மக்கள் மிக எளிதாக கல்வியை அணுக கூடிய வகையில் அமைய வேண்டும் என்றார்.அப்படியான பல்கலைக்கழகமாக தான் இப்போது வரை இருக்கிறது.ஜே.என்.யூ.வில் பெண்களுக்கு சிறப்பு சலுகையாக நுழைவு தேர்வில் அவர்கள் எடுத்த மதிப்பெண்கள் போக கூடுதலாக ஐந்து மதிப்பெண்கள் வழங்கப்படும்,இதன் மூலமாக அந்த வளாகத்தில் பெண்களுடைய எண்ணிக்கை கணிசமான அளவில் இருக்கும்.இந்த பல்கலைகழகம் எவ்வாறு கட்டமைக்க்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று.
அரசியல் அரங்கில் எத்தகைய நிகழ்வுகள் நடந்தாலும் ஜே.என்.யூ. பல்கலைகழக மாணவர்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதமாக மாறும்,மாணவர் போராட்டங்களுக்கும் இப்பல்கலைகழகம் பிரசித்திப்பெற்றது.இப்படிப்பட்ட பெருமைக்குரிய பல்கலைகழகம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்படுகிறது என்று பிரபல வரலாற்றாசிரியர் ரொமிலாதாப்பர் கூறுகிறார்.அதற்கு இப்போதிருக்கும் மத்திய அரசும்,பல்கலைகழக நிர்வாகம் தான் காரணம் என்று மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.அதன் தொடர்ச்சி தான் இந்த விடுதி கட்டண உயர்வும்,கல்வியை தனியார்மயமாக்கலும்.

இந்த விடுதி கட்டண உயர்வு அமலுக்கு வந்தால் 44% மாணவர்கள் பாதியில் படிப்பை நிறுத்த வேண்டிய சூழ்நிலை என்று மாணவர்கள் அஞ்சுகின்றனர்,காரணம் பெரும்பாலான மாணவர்களின் குடும்பத்தின் மாத வருமானம் 14,000 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது.
| Current Hostel Fees | New Hostel Fee structure | |
| For ‘Eligible’ BPL students | Others Students | |
| Rs 36, 240 per year | Rs 52,740 per year | Rs 69,480 per year |
இப்படியான சூழலில் வரும் மாணவர்களுக்கு இந்த புதிய கட்டணத்தை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும்.இந்த மாணவர்கள் போராட்டத்தால் மனிதவள துறை அமைச்சகமும்,பல்கலைகழக நிர்வாகமும் மாணவர்கள் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கட்டணத்தை பாதியாக குறைக்க முன்வந்ததையும் மாணவர்கள் ஏற்கவில்லை,அதை வெறும் கண்துடைப்பு நாடகம் என்று மாணவர்கள் குற்றம்சாட்டினர்.
இந்த கட்டண உயர்வால் மாணவர்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகிறது.இருவர் மற்றும் ஒருவர் தங்கும் அறை முன்னர் முறையே பத்து ரூபாய் மற்றும் இருபது ரூபாய் என்று இருந்தது.இப்போது 300 ரூபாய் மற்றும் 600 ரூபாய் என்று உயர்த்தப்பட்டிருக்கிறது,கிட்டதட்ட முன்னூறு சதவீதம் உயர்த்தப்பட்டிருக்கிறது.அடுத்ததாக சேவை கட்டணம்(Service Charge) மற்றும் பயன்பாட்டு கட்டணம் முறையே 10200 ரூபாய் மற்றும் 2940 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது,அதிலும் மேற்கூறிய கட்டணங்கள் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களுக்கு மட்டும்(நம் அரசாங்கம் நிர்ணயிக்கும் வறுமை கோடு அளவு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம் தான்).இந்த பிரிவின் கீழ் வராத மாணவர்களுக்கு இதை விட இரண்டு மடங்கு அதிக கட்டணம்.இந்த கட்டண உயர்வு தோராயமாக 3232 மாணவர்களை பாதிக்கும்.இதனால் அவர்களின் கல்வியை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.இதை தான் பல்கலைகழக நிர்வாகமும்,அரசும் விரும்புகிறதா?என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாத ஒன்று.

மாணவர்களின் நியாயமான போராட்டத்தை திசைதிருப்புவதற்கு அரசும்,அதற்கு ஒத்தூதும் சில ஊடகங்களும் மக்களின் வரிப்பணத்தை மாணவர்கள் வீணடிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினர்.ஆனால் இந்த வாதம் அபத்தமானது என்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியல் காட்டுகிறது.இந்தியாவில் உள்ள சிறந்த பல்கலைகழகத்தின் தரவரிசை பட்டியலில் ஜே.என்.யூ.விற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.ஆனாலும் தொடர்ச்சியாக இந்த பிரச்சாரம் தொடர்கிறது.வரி விவகாரத்தில் பணம் படைத்தவர்களும் உயர் நடுத்தர வர்க்க மக்களும் மட்டுமே வரி கட்டுகிறார்கள் என்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது.ஆனால் புள்ளி விவரங்கள் அதற்கு நேர்மாறாக இருக்கிறது.கடந்த 2017-18 நிதி ஆண்டில் 1919009 கோடி வரி வருவாய் வந்தது,இதில் 9,12,251 கோடி ரூபாய் மறைமுக வரி மூலமே கிடைத்தது,இது மொத்த வரி வருவாயில் 48% ஆகும்.இந்த மறைமுக வரி பெரும்பாலும் உழைக்கும் மக்கள் மூலம் வருவது தான் அதிகம்.ஆனால் பெருமுதலாளிகளும் உயர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி 5-6% நேர்முக வரிகளை கட்டுவதில்லை.யூ.ஜி.சி க்கு அரசு வருடம் 4600 கோடி ஒதுக்குகிறது,ஆனால் கடந்த ஐந்து வருடத்தில் பெருநிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை 2,14,000 கோடி.ஆனால் இத்தகைய வரி இழப்பை பற்றி ஏன் பேசுவதில்லை?.உயர்கல்வியில் அரசு வருடாவருடம் செலவு செய்வதை குறைத்து கொண்டிருக்கிறது.கல்வி வரியில் மூலமாக வந்த 2,18,00,000 கோடி பயன்படுத்தப்படவில்லை என்று சிஏஜி அறிக்கை சொல்கிறது.இதற்கு அரசு என்ன பதில் சொல்ல போகிறது?

இந்த போராட்டத்தின் மற்றொரு முக்கியமான அம்சம் கல்வியை தனியார்மயமாக்கல் எதிர்ப்பு.கல்வியை தனியார்மயமாக்குவது என்பது நேரடியாக ஏழை மாணவர்களை கல்வி நிலையங்களுக்கு வர விடாமல் தடுக்கும் முயற்சியே ஆகும்.தனியார் கல்வி நிறுவனங்கள் நிர்ணயிக்கும் கட்டண விகிதம் ஏழைகள் எட்ட முடியாத உயரத்தில் இருக்கும்,இது நிச்சயம் சமுதாய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை பாதிக்கும் ஏனெனில் இந்தியாவில் பெரும்பாலும் ஏழைகளாக இருப்பதும் அவர்கள் தான்.கல்வி ஒன்றுதான் அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றும் என்ற சூழலில் கல்வியை முழுவதும் தனியார்மயமாக்குவது என்பது ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்கு வேட்டு வைக்கும் செயல்.இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் உயர் கல்வி நிறுவனங்களில் 78% தனியார் கல்வி நிறுவனங்களும் அரசுசார் கல்வி நிறுவனங்கள் 22% மட்டுமே உள்ளன.இத்தகைய சூழலில் மேலும் தனியார்மயமாக்குவது என்பது ஏழை எளிய மக்களை தான் பாதிக்கும்.

இத்தகைய ஆபத்துகளை உணர்ந்ததால் தான் ஜே.என்.யூ. மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.இதை ஒடுக்க டெல்லி காவல்துறை மற்றும் வலதுசாரி கும்பல் ஜே.என்.யூ. மாணவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்தது.இதை எதிர்த்து நாடு முழுக்க மாணவர்கள் போராட்டம் வெடித்தது,இது மாணவர்கள் ஒற்றுமையை பறைசாற்றும் விடயமாகும்.ஜே.என்.யூ. மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்..
Comments
Post a Comment